Thursday 8 March 2012

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்


இன்று உலக மகளிர் தினம். வ. கீதா மற்றும் கிறிஸ்டி சுபத்ரா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் இப்புத்தகத்தைப் படித்து வெகு நாட்களாகின்றன. இருந்தாலும் இன்று அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும்.  இப்புத்தகத்தின் மைய இழை, ஆண்களை வில்லனாகவும் பெண்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும் சித்தரிப்பதாகும். அதில் ஒரு சில கருத்துகளில் சிறிது நியாயம் இருக்கலாம். அதிலும் பெரும்பான்மையான விசயங்கள் 19ம் நூற்றாண்டோடு முடிவடைந்துவிட்டன.

நேற்று நாளிதழ்களில் வந்த செய்தியொன்றை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். செய்தியின் தலைப்பு 'கள்ளக் காதல் விவகாரம் - 43 வயதான பெண்ணுடன் கல்லூரி மாணவர் தற்கொலை'.  விசயம் என்னவெனில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியச் சேர்ந்த மாது (எ) பாரத்திற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சென்ற 4ம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகச் சென்ற பாரத் தலைமறைவாகியுள்ளான். அவன் திருமணத்திற்குச் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்தாயிற்று. திகைத்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுதுதான் குட்டு வெளிப்பட்டது. பாரத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணிக்கும் முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. எனவே தன் மகனுடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு அதே தேதியில் வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இது முடிந்த பிறகு கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த பாரத் வீடு திரும்பியுள்ளான். வீட்டில் கடும் கோபத்துடனும் சோகத்துடனும் இருந்த அவனது பெற்றோர் அவனைக் கடுமையாகத் திட்டியுள்ளனர். விசயம் அந்தப் பகுதி முழுவதும் பரவியதால் மனமுடைந்த பாரத், ஜோதி வீட்டிற்குச் சென்று தன் மனக் குமுறலை அவளிடம் கூறியுள்ளான். இருவரும் தற்கொலை செய்வதன முடிவெடுத்து சேலையில் தனித்தனியாகத் தூக்கு மாட்டிக் கொண்டனர். இதில் உச்சகட்ட செய்தி... ஜோதியின் மகன் கார்த்திகேயனும் பாரத்தும் ஒரே வகுப்புத் தோழர்கள். தன் மகன் வயதே உள்ள பாரத்திடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என தாய் ஸ்தானத்தில் உள்ள பெண்ணுக்குத் தெரியாதா? நாட்டில் நடக்கிற எல்லா தவறுகளுக்கும் ஆண்கள்தான் காரணம் எனக் கூறுவது சரியல்ல.  ரத்தன் டாடா முதல் கலைஞர் வரை கலங்கடித்த 2ஜி ஊழலின் மையப்புள்ளி நீரா ராடியா என்ன ஆணா?.

வ. கீதாவும் கிறிஸ்டி சுபத்ராவும் பல நூல்களை ஆராய்ந்து கடும் உழைப்பைச் செலுத்தி இப்புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். ஒரு விவாதத்திற்கேனும் இப்புத்தகத்தைப் படிக்கலாம்.

நூல் : பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்
ஆசிரியர்கள் : வ. கீதாவும் & கிறிஸ்டி சுபத்ராவும்
விலை : ரூ.80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.
தொலைபேசி : 24332424

No comments:

Post a Comment